×

பொள்ளாச்சி நகரில் கானல் நீரான நவீன ஸ்டேடியம்: நிதி ஒதுக்கியும் பயனில்லை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் போதிய நிதி ஒதுக்கியும் நவீன ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் பள்ளி, கல்லூரிகள் பல இருந்தாலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட தனி ஸ்டேடியம் கிடையாது. நகரில், பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் திறந்த வெளிப்பகுதி மைதானத்திலேயே பெரும்பாலானோர், பல்வேறு விளையாட்டு பயிற்சி எடுக்கின்றனர்.

பொள்ளாச்சி நகரில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பல்வேறு தடகள போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக ஸ்டேடியம் அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த திட்டம் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சுமார் 7.4 ஏக்கரில் உள்ள மைதானத்தில், ஸ்டேடியம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல்வேறு சமூக சேவை அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர்.

அப்போது சப்-கலெக்டராக இருந்த அருண்சுந்தர் தயாளன் தலைமையில் நகரில் ஸ்டேடியம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது. கூட்டத்தின்போது, ஸ்டேடியம் அமைப்பதற்கான மாதிரி வரைப்படம் மூலம் எடுத்துரைக்கப்பட்டன. பின், சில மாதங்களில் ஸ்டேடியம் அமைக்க பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நகராட்சி நிதியாக ரூ.25 லட்சம், எம்.பி. நிதி ரூ.40 லட்சம், எம்எல்ஏ நிதி ரூ.25 லட்சம் மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை, பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் சுமார் ரூ.4.50 கோடியில் நவீன ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டன. அரசு உத்தரவு வந்தவுடன் தனிக்குழு அமைத்து ஸ்டேடியம் கட்டுவதற்கான பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும், நகரில் நவீன ஸ்டேடியம் அமைப்பதற்கான முயற்சியில், கடந்த அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அதிகாரிகளும் இன்னும் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  இதனால், நகரில் ஸ்டேடியம் அமைக்கும் பணி என்பது, கிடப்பில் போடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், தன்னார்வலர்கள் மட்டுமின்றி, அதிகாரிகள், ஆளுங்கட்சியினரும் தலையிட்டு, வளர்ந்து வரும் பொள்ளாச்சி நகரில், ஸ்டேடியம் அமைப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், பொள்ளாச்சியில் நவீன ஸ்டேடியம் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டிருந்தாலும், தற்போது நடக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், பொள்ளாச்சியில் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்ற  நம்பிக்கையில் இருப்பதாக, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Canal Water Modern Stadium ,Pollachi , Canal Water Modern Stadium in Pollachi: Allocating funds is useless
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு