×

நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூடும் நிலையில் ரணில் அமைச்சரவையில் 4 பேர் மட்டும் பதவியேற்பு: பிரதான எதிர்க்கட்சிக்கு அழைப்பு

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த 9ம் தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.   இதையடுத்து, அனைத்துக் கட்சி அடங்கிய இடைக்கால அரசை அமைக்க கோத்தபய அழைப்பு விடுத்தார். முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாசா, நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்பதற்கு, ‘கோத்தபய உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட 4 நிபந்தனைகளை விதித்தார். இதை ஏற்க மறுத்த கோத்தபய, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக அறிவித்தார். இவர் கடந்த 12ம் தேதி நாட்டின் 26வது பிரதமராக பதவியேற்று கொண்டார்.

ஆனால், ரணிலை பிரதமராக்கியதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ரணில் அமைச்சரவையில் பங்கேற்க மறுத்து விட்டன. இந்நிலையில், ரணிலின் புதிய அமைச்சரவையில் முதல்கட்டமாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த 4 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். வெளியுறவுத் துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், பொது நிர்வாக அமைச்சராக  தினேஷ் குணவர்தன, அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நகர, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சனா விஜேசேகர ஆகியோர் பதவியேற்றனர்.

நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ரணிலுக்கு உள்ளது. நாளை மறுநாள் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் கோத்தபய மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படுகிறது. இதனால், பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயவின் ஆதரவை கோரி அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடிதம் எழுதி உள்ளார். அதில், அமைச்சரவையில் இடம் பெறும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா
இலங்கையில் உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தனது நாட்டுக்கு உரம் வழங்கி உதவும்படி ஒன்றிய அரசுக்கு டெல்லியில் உள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இலங்கைக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை வழங்குவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது. யூரியா ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள போதிலும், இலங்கையின் வேண்டுகோளை ஏற்று இந்த உதவியை செய்கிறது.


Tags : Ranil ,Parliament , As Parliament convenes the next day In Ranil's cabinet Only 4 people took office: Call to the main opposition
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...