ஷேக் கலிபா மறைவு யுஏஇ புதிய அதிபர் ஒரு மனதாக தேர்வு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ)  அதிபராக இருந்தவர் ஷேக் கலிபா பின் சயீத் அல் நஹ்யான் (73).  இவர் 2004ம் ஆண்டு  அமீரகத்தின் இரண்டாவது அதிபராக பொறுப்பேற்றார். மிகப் பெரிய பணக்காரரான இவரது தந்தை இவருக்கு முன்பாக முதல் அதிபராக பொறுப்பு வகித்தார். 2014ம் ஆண்டு ஷேக் கலிபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், இவர் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். உடல்நலக்குறைவால், கடந்த சில ஆண்டுகளாக  வீட்டிலேயே அலுவல்களை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

இந்நிலையில், அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் (61) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமீரகத்தில் உள்ள 7 ஷேக்குகளின் கூட்டம் அபுதாபியில் உள்ள முஷ்ரீப் அரண்மனையில் நேற்று நடந்தது. இதில், நாட்டின் புதிய அதிபராக முகமது பின் சயீத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1971ல் ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்ற பிறகு, இதன் 3வது அதிபராக ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் பொறுப்பேற்கிறார். இவர், மறைந்த ஷேக் முகமது கலிபாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கலிபாவின் மறைவுக்கு இந்தியாவும் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரித்தது. இதற்காக, இந்திய தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Related Stories: