×

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு

லக்னோ: வாரணாசி ஞானவாபி மசூதியில்  வீடியோ பதிவுடன் கள ஆய்வு தொடங்கியது. இதையொட்டி மசூதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிங்கார கவுரி அம்மன் கோவிலின் அமைப்பு குறித்து, வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்தும்படி, வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழுவை நியமித்தது. இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.

இதையடுத்து, அந்த மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி கள ஆய்வு துவங்கி உள்ளது. இந்த மசூதிக்கு நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற  ஆணையர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் நேற்று வந்தனர். இதைதொடர்ந்து ஆய்வு துவங்கியதாக வாரணாசி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்துக்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மதன் மோகன் யாதவ் கூறுகையில், ‘‘நீதிமன்றம் நியமித்துள்ள  3 வழக்கறிஞர் ஆணையர்கள், ஒவ்வொரு தரப்பின் சார்பில் தலா 5 வழக்கறிஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் அடங்கிய குழுவினர் கள ஆய்வை மேற்கொள்கின்றனர்,’’ என்றார்.  மாநகர காவல் ஆணையர் கூறுகையில்,‘‘ ஆய்வு பணிகள் துவங்கியதை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மசூதியில் இருந்து ஒரு கிமீ  வரை போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.



Tags : Gnanavapi Mosque , With heavy police security Field study at the Gnanavapi Mosque
× RELATED ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு