பாஜ.வில் உட்கட்சி பூசல் திரிபுரா முதல்வர் திடீர் ராஜினாமா: அமித்ஷா உத்தரவால் விலகல்

அகர்தலா: திரிபுராவில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பிப்லாப்பின் செயல்பாட்டுக்கு திரிபுரா பாஜ.வில் கடும் எதிர்ப்பு உள்ளது. சமீபத்தில், இவரை கண்டித்து சில பாஜ எம்எல்ஏ.க்கள், காங்கிரசுக்கு தாவினர்.இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி, கடந்த வியாழக்கிழமை பிப்லாப் டெல்லிக்கு சென்றார். பாஜ தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர், திரிபுரா திரும்பிய அவர், நேற்று ஆளுநர் ஆர்யாவை சந்தித்தார். இதைத் தொடர்ந்து, தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பாஜ சட்டப்பேரவை கட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், இம்மாநில பாஜ தலைவர் மாணிக் சகா, துணை முதல்வர் ஜிஸ்னு தேவ் வர்மா, ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவ்மிக் ஆகியோரின் பெயர்கள், புதிய முதல்வர் பதவிக்கு அடிபட்டது. இறுதியில் மாணிக் சகா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் திரிபுரா அரச குடும்பத்தை சேர்ந்தவர்.

கட்சியை பலப்படுத்தும் பணி

ராஜினாமா செய்த பிறகு பிப்லாப் அளித்த பேட்டியில், ‘‘2023 தேர்தலை சந்திக்க, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைளில் ஈடுபடும்படி கட்சித் தலைமை எனக்கு உத்தரவிட்டுள்ளது. கட்சி பலமாக இருந்தால்தான், ஆட்சி அமைக்க முடியும். என்னை போன்றவர்கள் உழைத்தால்தான் கட்சி நினைத்தது நடக்கும்,’’ என்றார்.

Related Stories: