×

மான், மயில்களை காப்பாற்ற சென்ற 3 போலீசாரை சுட்டுக் கொன்ற வேட்டை கும்பல்

போபால்: மத்திய பிரதேசத்தில் மான்களை வேட்டையாடும் கும்பல், 3 போலீசாரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் மான்கள், மயில்கள் அதிகளவில் வாழ்கின்றன.  அந்த பகுதியில் ஒரு கும்பல் மான்களை வேட்டையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரான்  போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் நேற்று அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது,  அடர்ந்த வனப் பகுதியில் மறைந்திருந்த  வேட்டை கும்பல், போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சாந்த் குமார் மீனா, காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர்   பலியாயினர்.  போலீஸ் ஜீப் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ‘‘மான் வேட்டை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இந்நிலையில், இதுபற்றி  ஆலோசனை நடத்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் உயர்  அதிகாரிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த சிவ்ராஜ் சிங்,‘‘ வீரமரணமடைந்த போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி   வழங்கப்படும்’’ என்றார்.



Tags : The deer went to save the peacocks Hunting gang shooting 3 policemen
× RELATED கேரளாவில் பஸ் டிரைவருடன் மோதல்: எம்எல்ஏ, மேயர் மீது போலீஸ் வழக்கு பதிவு