×

பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 500 மாநகர பஸ்களில் சிசிடிவி கேமரா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின்கீழ், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு, அதன் முன்னோட்ட செயல்பாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ், 2,500 மாநகர பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியில், முதல்கட்டமாக 500 பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பஸ்சிலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் 4ஜி ஜிஎஸ்எம் சிம் வழியாக கிளவுட் அடிப்படையிலான கட்டளை மைய பயன்பாட்டுடன் இணைக்கப்படும். பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசவுகரியங்களின் போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும், அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், கட்டளை மையத்தில், பேருந்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த ஒலி தூண்டுதலை கொண்டு, செயலியை இயக்குபவர் நிலைமையைக் கண்காணித்து, நிகழ்நேர அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் மற்றும் 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

அதை தொடர்ந்து, அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் (மாநகர போக்குவரத்து கழகம் நீங்கலாக) மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்த 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், 5 ஓட்டுநருடன் கூடிய நடத்துனர், 21 ஓட்டுநர்கள், 106 நடத்துனர்கள், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 4 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், துறை முதன்மை செயலாளர் கோபால், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin , For the safe travel of the public CCTV Camera in 500 City Buses: Launched by Chief Minister MK Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...