×

திருமணம் செய்து வைப்பதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர் உட்பட 100 பெண்களிடம் மோசடி: ‘மேட்ரிமோனி’ உரிமையாளர் அதிரடி கைது

புதுடெல்லி: திருமணம் செய்து வைப்பதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர் உட்பட 100 பெண்களிடம் மோசடி செய்த டெல்லி ‘மேட்ரிமோனி’ உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர், டெல்லி போலீசில் அளித்த புகாரில், ‘ஒடிசா மாநிலம் கியோஞ்சரைச் சேர்ந்த ஃபர்ஹான் தசீர்கான் என்பவரை, திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தின் மூலம் சந்தித்தேன். அவர், தான் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்துவிட்டு தனியாக மேட்ரிமோனி பிஸ்னஸ் செய்து வருவதாக கூறினார். நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். தொழிலை மேம்படுத்துவதற்காக என்னிடம் பகுதி பகுதியாக ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், பணத்தை திருப்பித் தரவில்லை. அதனால், அவரின் பின்னணி குறித்து விசாரித்தேன்.

அப்போது, அவர் மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பல போலி ஐடிகளை உருவாக்கி, அதன் மூலம் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஒடிசா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல பெண்களுடன் நட்பாகப் பழகி அவர்களிடம் பணம் பறித்தது தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கொல்கத்தாவில் இருந்து கண்காணிக்கத் தொடங்கினர். இறுதியாக நேற்று பஹர்கஞ்சில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ஃபர்ஹான் தசீர்கானை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்ரிமோனியல் நடத்தி வந்த ஃபர்ஹான் தசீர்கான், திருமணமாகாத பெண்களிடம் நன்றாக பழகி, அவர்களை நண்பர்களாக்கி கொள்வார். அவர்களை சந்திக்க செல்லும் போதெல்லாம், விவிஐபி எண்கள் கொண்ட விலையுயர்ந்த வாகனங்களில் செல்வது உண்டு. ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டுவதாக அவர்களிடம் கூறியுள்ளார். அவருக்கு திருமணமாகி மூன்று வயதில் மகள் உள்ளார். அவரது வீட்டில் அவரது தந்தையும், சகோதரியும் உள்ளனர். எய்ம்ஸ் பெண் மருத்துவர் மட்டும் ரூ. 15 லட்சம் கடன் கொடுத்து ஏமாந்துள்ளார். இதேபோல் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.


Tags : AIIMS , 100 women, including AIIMS doctor, cheated to get married: 'Matrimony' owner arrested
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...