நவீன வசதியுடன் புதுப்பொலிவு; 135 அடி உயர அண்ணாநகர் டவர் பூங்கா விரைவில் திறப்பு

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசிக்க முடியும். இந்த நிலையில், காதலில் தோல்வி அடைந்தவர்கள் இந்த டவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடந்ததால் கடந்த 2011ம் ஆண்டு முதல் கோபுரத்தின் மேல் ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள், வாக்கிங் செல்பவர்கள் பாதுகாப்பு வசதிகளுடன் கோபுரத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி சார்பில், ரூ.40 லட்சம் செலவில் பாதுகாப்பு வசதிகளுடன் கோபுரம் சீரமைக்கப்பட்டு வருகிறது. கோபுரத்தின் மேலே ஏறிச்செல்லும்போது தவறி கீழே விழுந்து விடாத வகையில் பாதுகாப்புகள் செய்யப்பட்டு உள்ளன. கோபுரத்தில் புது வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. இது விரைவில் திறக்கப்பட உள்ளது. ‘’டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்போது கோபுரத்தின் மேல் ஏறி சென்று சென்னை நகரின் அழகை ரசிக்கலாம். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பூங்காவுக்கு வரும்போது சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்’ என்று பொதுமக்கள் கூறினர்.

Related Stories: