2வது நாள் சிந்தனை அமர்வு கூட்டம்; காங். மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை.! நாளைய கூட்டத்தில் உரையாற்றுகிறார்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரசின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு கூட்டம்’ நேற்று தொடங்கியது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் தொடக்க விழாவில் சோனியா காந்தி பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். அந்த வகையில் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம். இப்போது கடனை திருப்பி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் சுயவிருப்பங்களை புறந்தள்ளி, கட்சியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ப கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை. அப்போதுதான் கட்சியை வலுப்படுத்த முடியும். பாஜக ஆட்சியில் பதற்றமும் பயமும் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனம் காக்கிறார். எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டின் ஒற்றுமையை காப்பாற்ற வேண்டும்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று பட்டு பாடுபட வேண்டும்’ என்றார். இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்கள் ஆகியோருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக, இந்த மூன்று நாள் கூட்டத்தில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக நியமிப்பது தொடர்பாக வலியுறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: