தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீர் பயணம்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென்று இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தில் பரபரப்பான ஒரு அரசியல் சூழ்நிலை நிலவி கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக கவர்னர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை போல்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்திலும் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு கவர்னரையும், ஒன்றிய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் இன்று காலை 10.35 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அவர் நாளை ஞாயிறு இரவு 8.10 மணிக்கு டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்து சேருகிறார். கவர்னரின் இந்த திடீர் பயணம் ஏன் என்று தெரியவில்லை.

ஆனால் தற்போது சமீபகாலமாக கவர்னர் அவ்வப்போது தமிழ்நாட்டிலிருந்து திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். அப்போதெல்லாம் கவர்னரின் பயணம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அவர் திரும்பி வந்த பின்பு அந்த பரபரப்பு அடங்கி விடுகிறது. இப்போதைய பயணமும் அதை போல்தான் இருக்குமா? இல்லையேல் இது உண்மையிலே பரபரப்பான ஒரு பயணமாக இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேநேரத்தில் அவர் சொந்த வீடு கட்டி வருவதை பார்ப்பதற்காக செல்வதாகவும், மகள் அங்கு இருப்பதால் அங்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: