மாணவர்கள் செல்போனில் பாடம் படிக்க தடை விதிக்கவேண்டும்: பள்ளி கல்வி அமைச்சருக்கு கோரிக்கை

திருவள்ளூர்: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது; கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் இணையவழியாகவும் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்க உத்தரவிட்டு தற்போது 1ம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முடிந்துள்ளது.

10, 11, மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு கைபேசி மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டதால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பல மணிநேரம் கைபேசியை உபயோகிப்பது பழக்கமாகிவிட்டது. அதில் இருந்து மாணவர்களை மீண்டு வரவேண்டுமானால் விடுமுறை நாட்களிலும் பள்ளி நாட்களிலும் கைபேசி மூலம் வீட்டு பாடங்கள் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். கைபேசியில் வீட்டுப்பாடம் கொடுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும்.

இதனால் மாணவர்கள், வீட்டுப்பாடம் என்று பெற்றோரை ஏமாற்றி அதிக நேரம் கைபேசியை பயன்படுத்துகின்றனர். எனவே, கைபேசிக்கு தடை விதிக்கவேண்டும். அப்போதுதான் மாணவர்களை பழைய நிலைக்கு திரும்பி ஒழுக்கத்தை பின்பற்றி கல்வித் தரம் உயரும். எனவே, இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் கைபேசி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: