×

விருத்தாசலம், சிதம்பரத்தில் வடமாநில வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி-போலீசார் விசாரணை

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில் ஒரு மகன் அருகில் உள்ள பகுதியில் வசிக்கிறார். மற்றொரு மகனுடன் கிருஷ்ணமூர்த்தி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீட்டின் கதவை யாரோ தட்டியுள்ளனர். உடனே கிருஷ்ணமூர்த்தி வந்து கதவை திறந்து பார்த்த போது, வடமாநில வாலிபர்கள் 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவர்களை நீங்கள் யார் என்று கேட்ட போது முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளனர். மேலும் வேறு மொழியில் அவர்கள் பேசியதால் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து அருகில் இருந்தவர்களை கிருஷ்ணமூர்த்தி அழைத்துள்ளார். இதனால் பயந்து போன 4 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பித்து ஓடினர். ஆனால் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மட்டும் பொதுமக்கள் கையில் சிக்கிக்கொண்டார்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் இந்தி மொழியில் பேசியுள்ளார். இதனால் அந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் நேற்று காலை பொதுமக்கள் விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மேலும் அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வாலிபரை மீட்ட போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் அவர் சுய நினைவு இல்லாமல் போதையில் இருந்ததால் அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் மொழி பெயர்ப்பாளர் வரவழைத்து அவரிடம் இந்தியில் விசாரணை நடத்தி, அவர் பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை அறிய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்கள் வடமாநிலத்தில் இருந்து கொள்ளை அடிப்பதற்காக வந்த கும்பல்தானா அல்லது விருத்தாசலம் பகுதியில் கட்டிட வேலைக்கு வந்த வடமாநிலத்தவரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் திருட முயன்றவர்கள் கைது

சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் வட்டம் சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (55), விவசாயி. நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ எடுப்பது போன்று சத்தம் கேட்டது. இதனால் தேவராஜ் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது 2 மர்ம நபர்கள் அவரது பைக்கை திருடிச்செல்ல முயன்றனர். அவர் சத்தம் போட்டதும் பொதுமக்கள் திரண்டு 2 வாலிபர்களையும் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் தகவலறிந்ததும் ஒரத்தூர் போலீசார் சென்று பிடிபட்ட இருவரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள கோப்பாடி கிராமத்தை சேர்ந்த அன்வர் மகன் சேட்டு (22) எனவும், மற்றொருவர் சிதம்பரம் அருகே கொத்தங்குடி தெருவை சேர்ந்த சந்திரன் மகன் மணிகண்டன் (22) எனவும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vriddhachalam ,Dharma Adi-Police ,North Valley ,Chidambaram , Virudhachalam: Krishnamurthy (55) hails from Virudhachalam Manalur area of Cuddalore district. He has 2 sons and a daughter. Daughter
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு