×

கும்மிடிப்பூண்டியில் அதிமுக மாஜி அமைச்சர் மகள் திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விபத்து!: 11ம் வகுப்பு மாணவன் பலி..சிசிடிவி காட்சி வெளியீடு..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரமற்ற முறையில் லிப்ட் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவிற்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று மாலை ஆந்திராவை சேர்ந்த மணமகனுக்கும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தரைதளத்தில் வரவேற்பு அறையும், முதற்தளத்தில் உணவுக்கூடமும் உள்ளது. இந்த மண்டபத்தில் கீழ் தளத்தில் சமையல் செய்யப்பட்டு முதல் தளத்திற்கு லிப்ட் மூலம் உணவு பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். நேற்று மாலை கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 3 பேர் உணவு பொருட்களை லிப்ட்டில் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கேட்டரிங் ஊழியர்களான 11ம் வகுப்பு மாணவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உடன் சென்ற ஜெயராமன், விக்னேஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த இருவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தின் மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் தக்கன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தில் லிப்ட் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : AIADMK ,minister ,Gummidipoondi , Gummidipoondi, wedding hall, lift, student killed
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...