மோதிர மலையில் இறந்த பெண் யானை உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம்

குலசேகரம் : குமரி  மாவட்டம் மோதிர மலையில் காலில் காயங்களுடன் இறந்த பெண் யானை உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மோதிரமலை பகுதியில் பழங்குடியின மக்களின் விவசாய பகுதிகளில்  நேற்று முன்தினம் காலை 4 யானைகள் சுற்றி வந்துள்ளன. அதிகாலையில் அதில் 3 யானைகள்  திரும்பி சென்றன. ஒரு யானை  அந்த பகுதியில் அசையாமல் நின்றது. பழங்குடியின மக்கள் யானையை துரத்த பல  முயற்சிகள் ேமற்கொண்டும் அது அசையவில்லை.

நீண்ட நேரம் அப்படியே நின்றதால் பொதுமக்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது  அது  வயது  முதிர்ந்த பெண் யானை என்று தெரியவந்தது. முன் பகுதி இடது காலில் காயம்  எற்பட்டு வீக்கமாக காணப்பட்டது. வலியால் யானை நடக்க முடியாமல்  நின்றுள்ளது. தகவலின் பேரில் களியல்    பகுதியில் இருந்து வனத்துறையினர் ெசன்றனர். யானையின் நிலை குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர்    மற்றும் பொதுமக்கள் யானைக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். மதியம் வரை   நின்று கொண்டிருந்த யானை திடீர் என்று கீழே விழுந்து  இறந்தது.

இதையடுத்து   வன உதவி பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் மற்றும் வனத்துறை  அதிகாரிகள்  யானையை பார்வையிட்டனர்.இந்தநிலையில் நேற்று திருநெல்வேலியில்  இருந்து வந்த  மருத்துவ குழுவினர் யானை உடலை பிரேத பரிசோதனை  செய்தனர்.  அதன்பின்னர் உடல் அங்கேயே ஜெசிபி மூலம் பெரிய பள்ளம் தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. மேடான பகுதியில் இருந்து பள்ளமான பகுதிக்கு இறங்கி வரும்போது கால் சறுக்கி விழுந்து காலில் அடிபட்டதால் காயம் ஏற்பட்டிருக்கலாம். அந்த புண் புரையோடியதால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: