×

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் நாளை அமல்

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டிகளுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் நாளை (15ம் தேதி) முதல் அமலாகிறது.நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளை நிலங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் வீசி வருகின்றனர்.

வனப்பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுச்சூழலும் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடும்  இடங்களிலும், சுற்றுலா தளங்களிலும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் 15 இடங்களில் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்கள், அணை பகுதிகள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வீசி எறியப்படும் காலி மதுபாட்டில்களை சேகரித்து அகற்றும் பணி கடந்த 11ம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான கடைகளிலும் நாளை (15ம் தேதி) முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அவ்வாறு  விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி பாட்டில்களை மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மீண்டும் கொடுத்து ரூ.10ஐ திரும்ப வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம்.

எனவே பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் காலி மதுபாட்டில்களை, சேகரிக்கும் மையங்களில் ஒப்படைத்தோ அல்லது டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கொடுத்தோ நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியையும், விளைநிலங்களையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் கேட்டு கொண்டுள்ளார்.

Tags : Nilgiris , Ooty: A scheme to provide Rs 10 to empty liquor stores in the Nilgiris district will come into effect from tomorrow (15th).
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...