திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பரவலான மழை

* சேத்துப்பட்டில் 21 மி.மீ. மழை பதிவு * நெல் மகசூல் பாதிக்கும் அபாயம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது, அதன்படி, அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 21 மி.மீ. மழை பதிவானது.வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக, கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி, அதிகாலை வரை பரவலான மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் வெயில் முற்றிலுமாக தணிந்திருந்தது. மழை மேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. அதனால், கோடை வெயிலில் பாதிப்பு குறைந்தது.மாவட்டத்தில் அதிகபட்சமாக, சேத்துப்பட்டில் 21 மி.மீ. மழை பதிவானது. அதேபோல், ஆரணியில் 4.20 மிமீ, செய்யாறில் 13 மிமீ, செங்கம் 20 மிமீ, வந்தவாசியில் 6.50 மிமீ, போளூரில் 4.20 மிமீ, திருவண்ணாமலையில் 16 மிமீ,  தண்டராம்பட்டில் 6 மிமீ,  கலசபாக்கத்தில் 9.60 மிமீ, கீழபென்னாத்தூரில் 20.20 மிமீ, வெம்பாக்கத்தில் 14 மிமீ மழை பதிவானது.

தொடர்ந்து சில நாட்களாக மழை நீடித்தும், அணைகள், ஏரிகளின் நீர்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்ததால், படவேடு, கண்ணமங்கலம், செங்கம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.அதேபோல், அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிர் நிலை குலைந்து சரிந்திருக்கிறது.

தொடர்ந்து மேலும் சில நாட்கள் காற்றுடன் கூடிய மழை நீடித்தால், அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிர் அதிக அளவில் சேதமாகும் வாய்ப்பு உள்ளது. அதனால், வெகுவாக மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் கவலையுடன் தெரிவித்தனர்.

கலசபாக்கம்: கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டா கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது, பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பரவலாக சூறை காற்றுடன் பெய்த மழையால், நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன. சில இடங்களில் நெல் மணிகள் முளைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கலசபாக்கம் வட்டத்தில்தான் மழை பெய்தது. அப்போது, பல ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களும், தோட்டப்பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. தற்போது பெய்து வரும் மழையிலும் பல ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.எனவே, பயிர் பாதிப்புகளை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: