×

நாள்தோறும் கலைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் ஏற்காடு கோடை விழா 26ம் தேதி தொடக்கம்

*ஒரு வாரம் நடத்தப்படும் என அறிவிப்பு

சேலம் : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடப்பாண்டு கோடை விழா வரும் 26ம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு நடக்கிறது. இதனையொட்டி நாள்தோறும் கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏற்காடு உள்ளது. ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்தப்படும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

 கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.  தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து நடப்பாண்டு கோடை விழாவை நடந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, மலர் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து மலர்களும் பூத்துக்குலுங்குகிறது. இதனிடையே நடப்பாண்டு கோடை விழா வரும் 26ம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 26ம் தேதி தொடங்கும் கோடைவிழா, ஜூன் 1ம் தேதி வரை 7 நாட்களுக்கு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஏற்காடு கோடை விழாவானது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், ஏற்காட்டினை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழ கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது.

 கோடை விழாவிற்கென சேலத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் ஏற்காட்டின் முக்கிய இடங்களை ஒருநாள் முழுவதும் சுற்றிக் காண்பிக்கும் வகையில், பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வாகனங்கள் ஏற்காடு செல்லும் போது வழக்கமான சேலம்-ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், திரும்பி செல்லும் போது, குப்பனூர்-சேலம் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அனைத்து அரசுத் துறைகளும் பங்கேற்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. மேலும், தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், செல்ல பிராணிகள் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. ஏற்காட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கோடை விழா, நடப்பாண்டு ஒரு வாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளும், ஏற்காட்டில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Yercaud Summer Festival will begin on 26
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...