×

கோடை விழாவையொட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது

*பார்வையாளர்களை கவர்ந்த ஏர் உழவன் சிற்பம்

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோடை விழாவையொட்டி 13, 14, 15ம் தேதி ஆகிய 3 நாட்களில் நடைபெறும் 9வது வாசனை திரவிய கண்காட்சி நேற்று மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் துவங்கியது. இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடலூர் ஆர்டிஓ சரவண கண்ணன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், தோட்டக்கலை இனை இயக்குனர் (பொ) சிபிலாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கூடலூர் நகர் சுங்கம் பகுதியில் இருந்து கண்காட்சி நடைபெறும் பள்ளி மைதானம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தோட்டக்கலைத்துறை சார்பில் உழவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வாசனை திரவியங்களாலான ஏர் உழவர் காளை மாடுகள் மற்றும் பசுந்தேயிலை பறிக்கும் பழங்குடியினப் பெண் ஆகியோரின் சிற்பங்கள், வரவேற்பு வளைவு, பிரமாண்ட யானைத்தந்தம் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஏலக்காய், கிராம்பு பட்டை, கசகசா, மிளகு, சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகையான 75 கிலோ எடை உள்ள வாசனை திரவியங்கள் பயன்படுத்தி இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


alignment=



கூடலூர் நகராட்சி சார்பில் பிரமாண்டமான கழிவுப் பிளாஸ்டிக் பொருட்களால் ஆன ட்ராகன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் சார்பில் வனம் மற்றும் வன விலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதப்படுத்தப்பட்ட வனவிலங்குகளின் கண்காட்சி அங்கு அமைக்கப்பட்டுள்ளது. முதுமலை உழவர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் விவசாய பயிர்கள் விளை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சத்துணவு பண்டங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனை கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் ருசித்து மகிழ்ந்தனர். கூடலூர் பகுதியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் கூடலூர் பகுதியில் பல்வேறு முக்கியத்துவத்தை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் கலை கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடங்களாக வாசனை திரவிய கண்காட்சி நடைபெறாத நிலையில் இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கோடை விழா வாசனை திரவிய கண்காட்சி உள்ளூர் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதாகவும், காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தலைவர் பரிமளா, ஓவேலி நகராட்சி தலைவர் சித்ராதேவி, ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ், கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூடலூர் தாசில்தார் சித்தராஜ் நன்றி கூறினார்.

Tags : Cuddalore , A perfume exhibition has started in Cuddalore for the summer festival
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு