×

வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திவரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா காரணமாக விழா நடக்கவில்லை.

இந்நிலையில், இந்தாண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று காலை 4.20 மணிமுதல் 5.30  மணிக்குள் கோயில் பட்டாச்சாரியார்கள் மூலம் கருடாழ்வார் பொறித்த சின்னத்தை  கொடிமரத்தில் ஏற்றி தொடங்கிவைத்தனர். இதை முன்னிட்டு வரதராஜ பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி வழிநெடுகிலும் தோரணங்கள், மாவிலை கட்டி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரதராஜ பெருமாள், தேவி, பூதேவியுடன் தங்க சப்பரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மாலை சிம்ம வாகனத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்தார். இதையொட்டி, காஞ்சிபுரம் நகர கோயில் கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

2வது நாளான இன்று அம்ச வாகனம், சூரிய பிரபை, நாளை கருடசேவை உற்சவம் நடக்கிறது. 16ம் தேதி சேஷ வாகனம், சந்திரபிரபை, 17ம் தேதி தங்க பல்லக்கு, யாழி வாகனம், 18ம் தேதி தங்க சப்பரம், யானை வாகனம், 19ம் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. இதில், உலகில் 2வது உயரமான தேரில் வரதராஜ பெருமாள், தேவி, பூதேவியுடன் திருக்கச்சிநம்பி தெரு, மூங்கில் மண்டபம், காந்தி ரோடு, காமராஜர் வீதி, இந்திரா காந்தி சாலை, பஸ் நிலையம் உள்பட முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

20ம் தேதி திருமஞ்சனம், குதிரை வாகனம், 21ம் தேதி தீர்த்தவாரி, புண்ணியகோட்டி விமானம், 22ம் தேதி த்வாத்சாராசனம், வெட்டிவேர் சப்பரம் ஆகிய தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை இணை இயக்குனர் வான்மதி, துணை இயக்குனர் முத்து ரத்தினவேலு, செயல் அலுவலர் தியாகராஜன்ஆகியோர் செய்துள்ளனர். எஸ்பி சுதாகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Vaikasi Brahmorsava ceremony ,Varadaraja Perumal Temple ,Darshan , The Vaikasi Brahmorsava ceremony at the Varadaraja Perumal Temple began with the flag hoisting; Darshan of a large number of devotees
× RELATED நகராட்சி ஆணையர் வேண்டுகோள்...