எந்த மொழியையும் ஒன்றிய அரசு திணிக்கவில்லை: பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

கோவை: ஒன்றிய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை எனவும், எல்லா மொழிகளும் வளர ஊக்குவிப்பதாகவும் பாரதியார் பல்கலைக்கழக விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். இதில், 3,114 முனைவர் பட்டங்களும், 1,504 எம்.பில்., ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 424 இளநிலை பட்டங்கள், 48 ஆயிரத்து 34 முதுநிலை பட்டங்கள், 1,493 முதுகலை டிப்ளமோ பட்டங்கள் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 362 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஒன்றிய அரசு ஒரு மொழியை திணிக்க முயல்வதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படியல்ல. புதிய கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியைதான் ஊக்குவிக்கிறது. மாநில மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் வழக்காடுதல் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். தமிழ் உயர்வான மற்றும் பழமையான மொழி. பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனராஸ் பல்கலையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இது போல் இந்தியாவில் உள்ள பிற பல்கலைக்கழங்களில் இருக்கை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

Related Stories: