திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கோடை விடுமுறையில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு: காத்திருப்பு அறையில் காலை உணவு வெயிலை சமாளிக்க சிகப்பு கம்பளம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கோடை விடுமுறையில் வரும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கோயில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி  கூறியதாவது: கோடை விடுமுறையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம், புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால், அதிகளவு பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களுக்கு உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்கப்படும். நான்கு மாடவீதிகளில் நிழற்பந்தல்கள், வெள்ளை நிற குளிர்ச்சி பெயின்ட், சிகப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீஆஞ்சநேய சுவாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி  மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.  இவை பக்தர்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்யப்படும். தேவஸ்தான இணையதளத்திலும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்

தரிசிக்க 6 மணி நேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 61,087 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 30,271 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.39 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 19 அறைகளில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: