×

பாதுகாப்பு அளிப்பதாக கூறி குண்டுக்கு இரையாக்குவதா? காஷ்மீரி பண்டிட் படுகொலையை கண்டித்து வெடித்தது போராட்டம்: போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்து  ராகுல் பட் என்ற அதிகாரியை தீவிரவாதிகள்  சுட்டு கொன்றதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் பண்டிட்களின் போராட்டம் வெடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டம், சடூரா தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்து ராகுல் பட் என்ற அதிகாரியை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர். அவர் பண்டிட் என்பதை அறிந்து, அவர்தான் ராகுல் பட் என்பதை உறுதிப்படுத்திய பிறகு இந்த காரியத்தை அவர்கள் செய்தனர். சிறுபான்மையினரான பண்டிட்கள் மீது தீவிரவாதிகள் இதுபோல் தாக்குதல் நடத்துவது அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், பட் படுகொலையை கண்டித்து பண்டிட்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீரி பண்டிட் ஆன ராகுல் பட் கொலையை கண்டித்து காஷ்மீரின் பல இடங்களில்  போராட்டம் நடந்து வருகிறது. பட்காம் மாவட்டம் ஷேக்போராவில் போராட்டம் நடத்திய பண்டிட்கள், நகர் விமான நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

ராகுல் பட்டின் இறுதிச்சடங்கு ஜம்முவில் நேற்று மாலை நடந்தது. இறுதி ஊர்வலத்தில்  கலந்து கொண்டவர்கள் பிரதமர் மோடி, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி, இளம் பண்டிட்களை  துப்பாக்கி தோட்டாக்களுக்கு ஒன்றிய அரசு இரையாக்குகிறது என்றும், இதனால் காஷ்மீரில்  நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற தங்கள் கனவு தவிடுபொடியாகி விட்டது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த போராட்டம் வலுப்பதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

வீட்டில் நுழைந்த தீவிரவாதிகள்; போலீஸ்காரர் சுட்டுக்கொலை: தாசில்தார் அலுவலகத்தில் ராகுல் பட்டை தீவிரவாதிகள் கொன்ற பதற்றம் அடங்கும் முன்பாக, புல்வாமா மாவட்டத்தில் ரியாஸ் அகமது தோக்கர் என்ற போலீஸ்காரரை அவருடைய வீட்டுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நேற்றுக் காலை சுட்டு கொன்றனர். தீவிரவாதிகளின் இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : Kashmiri Pandit massacre , Preying on the bomb by claiming to provide security? Protest erupts to condemn Kashmiri Pandit massacre: Police use batons, tear gas
× RELATED பாதுகாப்பு அளிப்பதாக கூறி குண்டுக்கு...