கார் - பஸ் நேருக்கு நேர் மோதல் முன்னாள் எம்எல்ஏவின் பேரன் பரிதாப பலி: திருக்கழுக்குன்றம் அருகே பரிதாபம்

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது, மகன் கபிலன் (22), இவர், தாம்பரத்தில் உள்ள எம்சிசி கல்லூரியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வந்தார்.  இந்நிலையில், நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக கபிலன் காரில் செங்கல்பட்டு நோக்கி சென்றார். அப்போது, கீரப்பாக்கம் என்ற இடத்தில் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் கார் மீது நேராக மோதியது. இதில், பஸ்சுக்குள் கார் சொருகிக் கொண்டு அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் கபிலன் காரிலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய கபிலனின் உடலை மீட்டனர். பின்னர், கபிலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கபிலன் முன்னாள் திமுக எம்எல்ஏ வீ.தமிழ்மணியின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: