×

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழுஉருவ சிலையை துணை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்: 28ம் தேதி விழா

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞரின் முழுஉருவ சிலையை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், வரும் 28ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அதில்,  தான் நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால், கலைஞர் ஒருவர்தான். 13 முறை எம்எல்ஏவாக  இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் கலைஞர். திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தொடங்கியது. சுமார் 16 அடியில் தயாராகும் சிலை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, ₹1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் சிலை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தயாரிக்கப்பட்டு வருவகிறது.

கலைஞர் முழு உருவ சிலையை வரும் 28ம் தேதி சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்.

Tags : Vice President ,Omanthurai Government Garden , Vice President unveils full-length statue of artist at Omanthurai Government Garden: Ceremony on the 28th
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்