மாநிலங்களவை தேர்தல் மற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் எதிரொலி... அதிமுக பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போகிறது: இரு தரப்பும் பிடிவாதமாக இருப்பதால் கட்சியினர் கலக்கம்

சென்னை: சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும், அதிமுக பொதுக்குழு இந்த மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், இதில் போட்டியிட சீட் கேட்டு இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொள்வதால் பொதுக்குழு அடுத்த மாதம்தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடைசியாக 9.1.2021ம் ஆண்டு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள  வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அப்போதைய அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. கொரோனா காரணமாக 2022ம் ஆண்டு இதுவரை அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்படவில்லை.இந்த நிலையில், 2021ம் ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை பறி கொடுத்தது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து விவாதிக்க பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் கட்சி தலைமையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும், உள்கட்சி மோதல் காரணமாக பொதுக்குழு கூட்டப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து மாவட்டத்திலும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிகளுக்கான அதிமுக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மே 10ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து வருகிற 20ம் தேதியில் இருந்து 25ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறலாம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் இருந்து திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேர் பதவி ஜூன் மாதத்துடன் காலியாகிறது. இதில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுகவுக்கு 4 எம்பி கிடைக்கும். அதிமுகவுக்கு 2 எம்பிக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்படி, அதிமுகவில் 2 எம்பி பதவியை பிடிக்க அக்கட்சியில் இப்போதே மோதல் சூடுபிடித்துள்ளது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர். ஒரு எம்பி பதவி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்றொரு எம்பி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. செம்மலை உள்ளிட்ட பலரும் எம்பி சீட் கேட்டு கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

இதனால் கட்சி தலைமைக்கு கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுக்குழுவை கூட்டினால், உட்கட்சி மோதல் மேலும் அதிகரிக்கும் என்பதால் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை மாநிலங்களவை தேர்தல் முடிந்தபிறகு, ஜூன் மாதம் 15ம் தேதிக்கு மேல் ஏதாவது ஒருநாளில் நடத்த தலைமை முடிவு செய்துள்ளது. மேலும், தற்போது கத்தரி வெயில் என்பதால், பொதுக்குழுவை நடத்த வேண்டாம் என்று ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

அதன்படி ஜூன் மாதம் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் தற்போது நடைபெற்று தேர்வாகியுள்ள மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும்.

மேலும், சென்னையை சேர்ந்த சில மாவட்ட செயலாளர்கள் குறிப்பாக தி.நகர் சத்யா உள்ளிட்டவர்கள் கட்சி விழா எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வருகிறார்கள். இதுபோன்று செயல்படாத மாவட்ட செயலாளர்களை கழட்டிவிடுவது குறித்தும் அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று கடந்த ஏப்ரல் 12ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால் அதிமுக கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Stories: