×

விருதுநகர் பஸ் ஸ்டாண்டில் மாணவர்கள் அட்டூழியம் கண்டக்டர், 2 டிரைவர்கள் மீது சரமாரி தாக்குதல்: பஸ்களை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் கண்டக்டர், 2 டிரைவர்களை மீது இன்று காலை மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கண்டக்டர்கள், டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் பேக்குளத்தில் இருந்து விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு இன்று காலை அரசு டவுன் பஸ் வந்தது. இந்த பஸ்சில் டிரைவராக ஜெயராம், கண்டக்டராக முத்துராஜ் (30) ஆகியோர் வந்தனர். பஸ்சில் இருக்கை இருந்தும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடி வந்துள்ளனர். கண்டக்டர், மாணவர்களை உள்ளே அழைத்தும் வரவில்லை. விருதுநகர் பஸ் ஸ்டாண்ட் வந்ததும், கீழே இறங்கிய மாணவர்களை, கண்டக்டர் முத்துராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் முத்துராஜை தாக்கினர். இதை தடுக்க முயன்ற டிரைவர் ஜெயராம், மற்றொரு பஸ் டிரைவர் பெரியகருப்பன் ஆகியோரையும் தாக்கினர். இதில் 3 பேரும் காயமடைந்தனர். மூவரும் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மற்ற பஸ்களின் கண்டக்டர்கள், டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் 25க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன. அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, காரியாபட்டி, சாத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள், மீனாம்பிகை பங்களா முன்பு நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், பணிகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

விருதுநகர் பணிமனை வணிக மேலாளர் மாரிமுத்து, போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதல் நடத்திய மாணவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேரை பிடித்து, போலீசார் மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பஸ் ஊழியர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. காலை 8.30 மணியில் இருந்து 9.15 மணி வரை நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  கண்காணிப்பு தேவை விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் போலீஸ் அவுட்போஸ்ட் உள்ளது. இங்கு பெண் காவலரை தவிர யாரும் பணியில் இருப்பதில்லை. பஸ் ஸ்டாண்டில் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வருவதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Virudunagar Bus Stand , Students bully conductor, 2 drivers at Virudhunagar bus stand, Transport workers protest by stopping buses
× RELATED விருதுநகர் பஸ் ஸ்டாண்டில் மாணவர்கள்...