×

பாப்பான்விடுதியில் ஜல்லிக்கட்டு: 800 காளைகள் அமர்க்களம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியில் முத்து முனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 300 வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. புதுக்கோட்டை ஆர்டிஓ அபிநயா உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். காலை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஆக்ரோஷமாக சீறிபாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் சார்பில் ரொக்கம், தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், மின்விசிறி, எவர் சில்வர் பாத்திரங்கள், ஹெல்மெட் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டையொட்டி எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் ஆலங்குடி டிஎஸ்பி வடிவேலு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

25 பேர் காயம்: புதுக்கோட்டையை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இங்கு 850 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 210 வீரர்கள் கலந்துகொண்டனர். காளைகள் முட்டியதில் மதன்குமர்(20), சிதம்பரம்(52), கிருஷ்ணன்(55), நாகராஜ்(22), சுரேஷ்(38), மனோஜ்குமார் (21) உள்ளிட்ட வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் செல்லத்துரை (38), விக்கி(23) உள்ளிட்ட 8 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சீரங்கம்பட்டியை சேர்ந்த மணி என்பவரது காளை ஜல்லிக்கட்டு திடலில் இருந்து அருகாமையிலிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த அன்னவாசல் தீயணைப்பு வீரர்கள் காளையை உயிருடன் மீட்டனர்.



Tags : Papanville Jallikattu , Jallikattu at Pappan Hotel, 800 bulls
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...