இலங்கையில் தப்பிய கைதிகள் ஊடுருவல் அபாயம்: தூத்துக்குடி கடல் பகுதியில் மரைன் போலீசார் ரோந்து: தீவு பகுதிகளில் தீவிர சோதனை

தூத்துக்குடி: இலங்கையில் தப்பிய கைதிகள் ஊடுருவல் அபாயம் காரணமாக தூத்துக்குடி கடல் பகுதியில் மரைன் போலீசார் ரோந்து சென்று தீவு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் 50க்கும் மேற்பட்டோர், தப்பினர். இவர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் படகு மூலம் அகதிகள் போன்று ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தற்போது படகுகளில் இலங்கையில் இருந்து மக்கள் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் சாதாரண பொதுமக்கள்தான் என்று விசாரணைக்கு பிறகு தெரிய வந்தால் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்னறனர். இதேபோல் தப்பிய கைதிகளும், அகதிகள் போர்வையில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி கடலோர மரைன் போலீசார், கடலோர காவல்படையினர் கடலில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் நேற்று காலை படகு மூலம் கடலோர பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது மீன்பிடி படகுகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகிறார்களா என்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளிலும் சோதனை நடத்தினர். தீவு பகுதிகளில் யாரேனும் பதுங்கி உள்ளார்களா என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். மேலும் மத்திய மாநில உளவுத்துறையினர், கியூ பிரிவினர் உள்ளிட்டவர்களும் கடலோர பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: