ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் நுங்கும் நுரையுமாக காணப்படும் தண்ணீர்

ஓசூர்: தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நீர் தமிழகத்தின் கொடியாளம் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு வந்தடைகிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 480கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 593கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 480கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28அடியில் தற்போது 40.18 அடிக்கு தண்ணீர் உள்ளது.

இதேபோல் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று வினாடிக்கு  505கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 279கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 47.14அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனிடையே கர்நாடக மாநில ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுகளை ஆற்றில் நீர் அதிகரிக்கும் போது வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதேபோல் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நுங்கும் நுரையுமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதிலும் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: