காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும்; உயர் கல்வித்துறை தகவல்

சென்னை: காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம் எனவும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவர் எனவும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார். இந்த நிலையில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும் என கூறினார். மேலும் இந்த திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: