திருப்பதியிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு பஸ்சில் 16 கிலோ கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது-காட்பாடியில் மத்திய கலால் பிரிவு போலீசார் அதிரடி

வேலூர் :  தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்காக கஞ்சா ஆபரேஷன் 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளூர் போலீசார், தமிழக ரயில்வே போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மத்திய கலால் பிரிவு போலீசார் என மாநிலம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்கின்றனர். மேலும் இவற்றை கடத்தி விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வேலூர் மண்டல மத்திய கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் எஸ்ஐகள் சிவக்குமார், சங்கர், செல்லபதி, ரங்கநாதன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசு விரைவு பஸ்சை மடக்கி சோதனை நடத்தினர்.

அதில் 2 பெண் பயணிகள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 7 கவர்களில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவண்ணாமலை மண்டி மேட்டு தெருவை சேர்ந்த கலைவாணி(54), முனியம்மாள்(30) என்பது  தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: