×

மீன்பிடிக்க சென்ற அக்கா, தங்கை சேற்றில் சிக்கி பலி-மயிலாடுதுறை அருகே சோகம்

குத்தாலம் : மயிலாடுதுறை அருகே மீன்பிடிக்க சென்ற அக்கா, தங்கை சேற்றில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (32). ஆந்திராவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (26). இவர்களுக்கு சன்சிகா (4), சுஜி (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சன்சிகா 4ம் வகுப்பும், சுஜி 3ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் சகோதரிகள் இருவரும், நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த தங்களது நண்பர்களுடன் அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது சன்சிகாவும், சுஜியும் எதிர்பாராத விதமாக தவறி குளத்தில் விழுந்தனர். இதில் குளத்தில் குறைவாக தண்ணீர் இருந்தாலும் சேறும், சகதியுமாக இருந்ததால் சேற்றில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Akka ,Lig-Mayiladuthura , Kuthalam: The tragedy of the incident where the elder sister who went fishing near Mayiladuthurai and her younger sister got stuck in the mud has died.
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!