அன்னவாசல் அருகே மருந்தாந்தலை ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 710 காளைகள்-கிணற்றுக்குள் காளை தவறி விழுந்ததால் பரபரப்பு

விராலிமலை : மருதாந்தலை அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு போட்டியில் 710 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் காளைகளை தழுவ முயன்ற காளையர்கள் 26 பேர் காயமடைந்தனர். இதில் பங்கேற்ற காளை‌ ஒன்று அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்தது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு காளை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோயில் விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திமுக மாநில செய்தி தொடர்பாளர் பி.டி.அரசகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். காலை 8.10 தொடங்கிய இப்போட்டி மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது

710 காளைகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் 192 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் பிடிபட்ட போதும் பல காளைகள் வீரர்களிடம் போக்கு காட்டி சென்றது.

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 710 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 192 பேர் மூன்று சுற்றுகளாக களம் இறக்கப்பட்டனர். இதில் காளைகளை அடக்க முயன்ற காளையர்கள் 26 பேர் காயமடைந்தனர். இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக தனியார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிக்காசு,பீரோ,கட்டில், சில்வர் அண்டா, குக்கர் உள்ளிட்டவை பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மாடுபிடி வீரர்களும், மாடுகளும் அனுமதிக்கபட்டனர்.

இதில் பங்கேற்ற சீரங்கம்பட்டியைச் சேர்ந்த மணி என்பவரது காளை போட்டியில் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற நிலையில் வாடிவாசலை தாண்டி வெளியே ஓடிச்செல்லும் போது அங்கிருந்த 80 ஆழம் 30 அடி நீர் நிரம்பிய விவசாய கிணறு ஒன்றில் கால் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கயிறு மூலம் காளையை கட்டி உயிருடன் மீட்டனர்.ஜல்லிகட்டு போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

Related Stories: