×

குழந்தை திருமணத்தை தடுப்பது நமது அனைவரின் கடமையாகும்-கருத்தரங்கில் அரியலூர் கலெக்டர் பேச்சு

அரியலூர் : குழந்தை திருமணத்தை தடுப்பது நமது அனைவரின் கடமையாகும் என்று விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ரமணசரஸ்வதி பேசினார்.அரியலூர் மாவட்டம், விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சமூக நலத்துறையின் சார்பில் அட்சய திருதியை முன்னிட்டு, இன்றைய இளைஞர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:

அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சில சமுதாய மக்கள் தங்களது குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே குழந்தை திருமணம் செய்கின்றனர். தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கூடுதல் முதன்மை செயலர் அவர்களின் ஆணைப்படி குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள், அதனால் இளைஞர்களால் மட்டுமே சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியும். நான் இளைஞர்கள் என்று கூறுவது ஆண்கள் மட்டும் இல்லை பெண்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். சமுதாயத்தில் சிலர் 18-வயதிற்கு குறைவான வயதில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அச்சிறுமியின் கல்வி பாதிக்கப்படுகிறது. உடல் நிலை பாதிப்பு மற்றும் வாழ்க்கையில் முன்னேற்ற பாதிப்பும் ஏற்படுகிறது.

அவ்வாறு குழந்தை திருமணம் செய்தால் குழந்தை திருமண சட்டத்தின்படி ரூ.ஒரு லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. மேலும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, குழந்தை திருமணத்தை தடுப்பது நமது அனைவரின் கடமையாகும்.அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட வேண்டும்.

பெண்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை சமூக நலத்துறையின் வாயிலாக (திருமண உதவி திட்டங்கள்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் படித்து சமுதாய மாற்றத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரமண சரஸ்வதி பேசினார்.பின்னர், அண்ணா பொறியியல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் அழகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அன்பரசி, குழந்தை நலக்குழுத்தலைவர் செந்தில்குமார், நன்னடத்தை அலுவலர் கணேசன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ariyalur , Ariyalur: It is the duty of all of us to prevent child marriage
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை