கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடுகிடு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 550 வாகனங்களில் இருந்து 5,000 டன் காய்கறிகள் வருகின்றன. இன்று காலை 480 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் வந்துள்ளன. வரத்து குறைவால் தக்காளி, பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், கோஸ் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பெங்களூர் தக்காளி 60க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ நாட்டு தக்காளி 50ல் இருந்து 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கேரட் ரூ.25ல் இருந்து 35க்கும், பீன்ஸ் 80ல் இருந்து 90க்கும், கத்திரிக்காய் ரூ.25ல் இருந்து ரூ.35க்கும், குடை மிளகாய் ரூ.30ல் இருந்து ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், ‘தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், குடைமிளகாய் உள்ளிட்டவற்றின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. தற்போது, 480 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் மட்டுமே வருகிறது. வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென மீண்டும் உயர்ந்துள்ளது’ என்றார்.

Related Stories: