×

திருச்சுழி அருகே சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை

திருச்சுழி : திருச்சுழி அருகே பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி அருகே மறவர்பெருங்குடி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்த சாலையானது, பந்தல்குடியிலிருந்து கொப்புசித்தம்பட்டி, மறவர்பெருங்குடி, தும்முசின்னம்பட்டி வழியாக கமுதி செல்லும் பிரதான சாலையாக உள்ளது. பந்தல்குடியிலிருந்து கமுதி செல்ல அருப்புக்கோட்டை, கல்லூரணி வழியாக சுற்றி வர கூடுதலாக 40 கிலோமீட்டர் அதிகமாகி வருகிறது. எனவே பந்தல்குடியில் இருந்து நேரடியாக கமுதி செல்லும் பிரதான சாலையாக இந்த சாலை இருந்து வருகிறது.

மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன் இவ்வழியாக கமுதி செல்ல பயணிகள் பேருந்து சென்று வந்த நிலையில், தற்போது சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பேருந்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மறவர்பெருங்குடி வழியாக செல்லும் இந்த பிரதான சாலை மிகவும் பள்ளமாக காணப்படுகிறது. இவ்வழியாக, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ, விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன.

மேலும் அப்பகுதியில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலை மிக மோசமாக இருப்பதால் சைக்கிளில் செல்ல முடியாமல் நடந்து சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளதாக மாணவ, மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஒரு அவசர நேரத்திற்கு கூட இவ்வழியாக செல்வது பெரும் ஆபத்தாக இருந்து வருவதாகவும், சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், மழைக்காலங்களில் இச்சாலையில் இடுப்பு அளவிற்கு மேல் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தண்ணீர் தேங்கியிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மறவர்பெருங்குடி கிராமத்தில் முப்பது வருடமாக குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruchirappalli , Tiruchirappalli: School children have demanded that the road near Tiruchirappalli, which has been bombed for many years, be repaired.
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....