×

சீலையம்பட்டி ஊராட்சியில் குடியிருப்பு நடுவே பயமுறுத்தும் கிணறு

சின்னமனூர் : சீலையம்பட்டி ஊராட்சியில் குடியிருப்பு நடுவே உள்ள கிணற்றை மூட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே தேனி ஒன்றியத்தில் உள்ள சீலையம்பட்டி ஊராட்சியில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  குடியிருந்து வருகின்றனர். விவசாய பகுதியான இங்கு  ஊர் விரிவாக்கம் என்ற பெயரில் அதிகமான குடியிருப்புகள் உருவெடுத்தன. அப்போது ஆங்காங்கே தோட்டப் பகுதிகளுக்குள் இருக்கும் கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டுவிட்டு வீடுகளை கட்டிவிட்டனர்.

   இங்குள்ள 2வது வார்டு வேப்பம்பட்டி செல்லும் சாலையில் ஒரு திருமண மண்டபம் மற்றும் சப்பாணியம்மன் கோயில் சுற்றி 8 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு தெருக்களின் மத்தியில் கடந்த 50 ஆண்டிற்கும் முன்பாக தோண்டிய 100 அடி ஆழ விவசாயக் கிணறு உள்ளது. கிணறு பயன்பாடின்றி சுற்றுச்சுவர் இல்லாமல் தரையோடு தரையாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கிணற்று பகுதியில் அதிகளவில் மக்கள், சிறுவர்கள் நடமாட்டம் உள்ளதால் உயிர்ப்பலி ஏற்பட  வாய்ப்பு உள்ளது.

எனவே,ஆபத்தாக காட்சிப் பொருளாக இருக்கும்  இந்த கிணற்றை உடனே மூட வேண்டும் அல்லது நான்கு புறங்களிலும் சுற்றுச்சுவர் கட்டி பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.இது  குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், கிணறு தொடர்பாக 20 ஆண்டுக்கு மேலாக மாவட்ட நிர்வாகம், சீலையம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கிணற்றை சுற்றியும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சர்வ சாதாரணமாக குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டுகின்றன. மேலும் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் கழிவுநீர் மற்றும் மழை நீரால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கிணறு விசயத்தில் அக்கறையெடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Seelayampatti , Chinnamanur: Villagers have demanded the closure of a well in the middle of a residential area in Seelayampatti panchayat. Chinnamanur
× RELATED பனியன் நிறுவன அறையில் கட்டிங் மாஸ்டர் தற்கொலை