திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்-ஏராளமானோர் திரண்டனர்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 378 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், கடந்த 10ம் தேதி நடைபெறுவதாக இருந்த அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடந்தது. அரசு உதவிகள், பயண சலுகை, உதவி உபகரணங்கள் பெறுவதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அவசியம் என்பதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் தனித்தனியே மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, பாதிப்பின் தன்மை மற்றும் பாதிப்பு சதவீதம் குறித்து சான்று அளித்தனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் அடையாள ஆவணங்கள் சரிபார்த்தல், பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகள் நடந்தன. நேற்று நடந்த முகாமில் 378 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடையாள அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்கவும், மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: