×

கடப்பாவில் 2.66 கிலோ தங்க நகைகள் ₹45 ஆயிரம் பறிமுதல்-திருடிய 5 மணி நேரத்தில் ஊழியர் கைது

திருமலை :  கடப்பாவில் உள்ள தங்க நகை கடையில் 2.66 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹45 ஆயிரத்தை திருடிச்சென்ற 5 மணி நேரத்தில் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா  நகரில் மெஹ்தாப் நகைக்கடையில் ஷேக் மசூத் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதால், உரிமையாளர் மஸ்தானின் முழுமையான நம்பிக்கைக்கு உரியவராக வைத்திருந்தார். இந்நிலையில், ஷேக் மசூத் சில ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஜாமினாக இருந்து கடன் பெற்று வழங்கி உள்ளார். அவ்வாறு பெற்று தந்த கடனை உறவினர் திருப்பி செலுத்தாததால், மசூத்திடம் கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்தனர். இதனால் கடனில் இருந்து வெளிவர தான் பணி புரியும் நகை கடையில் திருட  திட்டம் தீட்டினார்.

வழக்கமாக தினமும் காலையில் உரிமையாளர் மஸ்தானின் வீட்டிற்குச் சென்று கடையின் சாவியை பெற்று கொண்டு கடையைத் திறப்பார்  மசூத். வந்த சிறிது நேரத்தில் மஸ்தான் கடைக்கு  வருவார். இதை மனதில் கொண்டு அசல் சாவிக்கு பதிலாக போலீ சாவியை தயார் செய்தார். அவ்வாறு நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு மஸ்தான் மற்றும் மசூத் இருவரும் ஒன்றாக கடையைப் பூட்டிவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் கடைக்கு சென்ற மசூத்  தன்னிடம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த போலீ சாவியை கொண்டு, கடையின் ஷட்டரை திறந்து  ரேக்குகளில் வைக்கப்பட்டிருந்த 2.66 கிலோ தங்க நகைகள் மற்றும் கேஷ் கவுண்டதில் இருந்த ₹45 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து மஸ்தான் 3 மணிக்கு கடைக்கு  சென்று பார்த்தபோது, கடையில் இருந்த நகை மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக கடப்பா முதலாவது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குற்றவாளியை பிடிக்க எஸ்பி அன்புராஜன் சிறப்புக் குழுக்களை அமைத்தார். இதில் ஷேக் மசூத் தங்கத்தை திருடிவிட்டு திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வேகோடூர் அருகே பாலுபள்ளி சோதனை சாவடியில் சோதனை நடத்தியபோது, அரசு பேருந்தில் வந்த  மசூத் பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த 2.66 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 மணி நேரத்தில் ₹1.2 கோடி மதிப்பிலான 2.66 கிலோ தங்க நகைகள், ₹45 ஆயிரம் மற்றும் மூன்று சாவிகளை பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்பி அன்புராஜன் தெரிவித்தார்.



Tags : Kadapa , Thirumalai: Police have nabbed an employee of a gold jewelery shop in Kadapa for stealing 2.66 kg of gold jewelery and 45,000 within 5 hours.
× RELATED ஆந்திர மாநிலம் புலிவேந்துலாவில் ₹862 கோடியில் வளர்ச்சி பணிகள்