×

தருமபுரி அருகே உணவு தேடிச் சென்ற மக்னா யானை மின்சாரம் தாக்கி பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை

தருமபுரி: தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி காட்டுயானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தில் உள்ள நெல்வயலில், யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானை எவ்வாறு உயிரிழந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அக்கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி, காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் செல்வதை தடுக்க, அவருடைய வயலைச் சுற்றிலும் வெளிச்சத்திற்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததும், அந்த வயரில் சிக்கி காட்டுயானை உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

உணவு, தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியே வந்த யானை, நெல்வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வயரை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. யானையை பரிசோதித்த வனத்துறையினர், இறந்த யானையானது ஆணுக்கும் சேராமல், பெண்ணுக்கும் சேராமல் இருக்கக்கூடிய மக்னா யானை என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விவசாயி சீனிவாசன் நெல்வயலுக்கு மின்வேலி அமைத்தது எப்படி? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இக்கிராமங்களை  ஒட்டி வனப்பகுதி உள்ளதால், கோடை காலங்களில் வனப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சமயங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனவிலங்குகள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்கும், கிராமப்புறங்களுக்கும் இரவுநேரங்களில் வருவது வழக்கம். அதைபோன்றே, இந்த யானையானது உணவு, தண்ணீர் தேடி வயல்பகுதிக்கு வந்த நிலையில், மின்வயரை மிதித்து யானையானது உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக பாலக்கோடு வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     


Tags : Dharmapuri , Dharmapuri, Magna elephant, electricity, forestry, investigation
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...