ஆக்சிஜன் இல்லாத இடத்தில் தாவரங்கள் வளர்வது சாத்தியம்!: நிலவின் மண்ணில் விதைகளை முளைக்க வைத்து புளோரிடா பல்கலை. விஞ்ஞானிகள் சாதனை..!!

வாஷிங்டன்: சந்திரனில் இருந்து மனிதர்களால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரங்கள் வளரும் என்பதை புளோரிடா விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். பிராணவாயு இல்லாத நிலவின் நிலப்பரப்பில் தாவரங்கள் வளருமா என்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு அதற்கான ஆராய்ச்சிகளை தொடங்கினார்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பல்வேறு காலகட்டத்தில் நிலவில் இருந்து பூமிக்கு கொண்டுவந்த மண்ணில் மாற்றம் ஏதும் செய்யாமல் சிறிய குடுவைகளில் வைத்து அதில் விதைகளை பதித்து பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக விதைகள் அனைத்தும் முளைக்க தொடங்கியுள்ளன.

ஆனால் பூமியில் உள்ள தாவரங்களை போல் இல்லாமல் சந்திர மண்ணில் முளைத்த செடிகள், வளர்ச்சி குன்றி காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள புளோரிடா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை மூலமாக நிலவில் ஓரளவுக்கு தாவரங்கள் வளர முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனுக்கு வீரர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற ஆய்வுகள் எதிர்காலத்தில் நிலவில் ஆக்சிஜனை உருவாக்குதல் குறித்த ஆராய்ச்சிக்கு பயன்தரும் என விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: