அரக்கோணம் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்!: சாதுர்யமாக காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப்படை..!!

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார  ரயில் மீது ஏறி உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலையில் ஈடுபட முயன்றவரை ரயில்வே பாதுகாப்புப்படையினர் சாதுர்யமாக காப்பாற்றி இருக்கின்றனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில், சென்னையில் இருந்து வந்த மின்சார ரயில் நடைமேடை 7ல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ரயிலின் மேற்கூரை மீது ஏற முயற்சி செய்த முதியவரை ரயில்வே பாதுகாப்புப்படை வீரரான ஜிஜெந்திரா  என்பவர் பார்த்து ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தார். இதனால் உயர்மின் அழுத்த கம்பியின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த முதியவர் ரயில் கூரை மீது ஏறி உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலை செய்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு திரண்ட காவலர்கள், ரயில்வே ஊழியர்கள் அவரை கீழே இறங்க சொல்லியும், அவர் ரயிலின் மேற்கூரை மீது வேகமாக நடக்க முயன்றார். தொடர்ந்து பணியில் இருந்த ரயில்வே காவலர்கள், ரயில் கூரை மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவரை சாதுர்யமாக காப்பாற்றினர். முதற்கட்ட விசாரணையில் அந்த முதியவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பதும், மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. முதியவரை காப்பாற்ற உயர் மின் அழுத்த கம்பி மின்சாரத்தை துண்டித்ததால் சென்னை - கோயம்புத்தூர், சென்னை -  பெங்களூரு ஆகிய 2 விரைவு ரயில்கள் 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்றன.

Related Stories: