ராஜஸ்தான் உதய்பூரில் 3 நாட்கள் மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி கூட்டம்: சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலை மையப்படுத்தி இன்று தொடங்கும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். புதிய உறுதியுடன் வெற்றிக்கான பாதையும், தோல்விக்கான காரணமும் கண்டறிவதே என்ற கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்றகுழு தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், மாநில பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 500 பேர் பங்கேற்க உள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி டெல்லியில் இருந்து ரயிலில் புறப்பட்டுச் சென்றார். அவரை வழியனுப்பி வைக்க காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் நிலையத்தில் கூடி இருந்தார்கள். அப்பொழுது ரயில் நிலையத்தில் இருந்த கூலித்தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார். கூட்டத்தில் கட்சி தொடர் தோல்விகளை சந்திக்கும் நிலையில், எதிர்கால உத்திகள், பொது பிரச்சனைகள், செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க கூடும் என தெரிகிறது. இவை தவிர, நாட்டின் இப்போதைய அரசியல், பொருளாதாரம், சமூக பிரச்சனைகள், விவசாயம், வேலை வாய்ப்பு, பொதுத்துறை நிறுவன பிரச்சனைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்; ஏற்கெனவே கூட்டத்தில் நிறைவேற்றவேண்டிய தீர்மானங்களுக்கு, காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை இலக்காக முன்வைத்தும் ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

Related Stories: