×

அதிமுகவில் 2 ராஜ்யசபா பதவிக்கு கடும் போட்டி இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் மல்லுக்கட்டு: சாதி ரீதியிலான மோதலாகவும் மாறியது

சென்னை: அதிமுகவில் 2 ராஜ்யசபா பதவியை பிடிக்க இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளுக்கிடையே கடும் மோதல் உருவாகியுள்ளது. நாடு முழுவதும் ஜூன் மாதம் 20 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 6 எம்பிக்களின் பதவிக்காலம் முடிகிறது. இதனால் அடுத்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக் காலம் முடிகிறது.
அதில் தற்போதைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்டையில் திமுகவுக்கு 4 எம்பி பதவியும், அதிமுகவுக்கு 2 எம்பி பதவியும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. திமுகவை பொறுத்தவரை கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி, தகுதியின் அடிப்படையில் எம்பிக்களை தேர்வு செய்து வருகிறார். திமுக சார்பில் தேர்வு செய்யப்படும் எம்பிக்கள் அனைவரும் ராஜ்யசபாவில் பேசும்போது, புள்ளிவிவரங்களுடன் பேசி கலக்கி வருகின்றனர். ஆனால், அதிமுகவில் நிலைமை தலைகீழாக உள்ளது. அங்கு செல்வாக்கு, பணம், சாதி அடிப்படையிலேயே தேர்வு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளனர். 2 எம்பி பதவிகளில் ஒரு எம்பி பதவி முன்னாள் அமைச்சரும் சமீபத்தில் சிறை சென்று வந்தவருமான ஜெயக்குமாருக்கு தருவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். இதனால் மீதம் உள்ள ஒரு எம்பி பதவியை தனது அணிக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தனக்கு எம்பி பதவி வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவரோ, உறுதியளிக்காமல், மூத்த தலைவர்களை சந்திக்குமாறு கூறிவிட்டார். அதேநேரத்தில், திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவாளருக்கு சீட் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூறியுள்ளார். ஆனால் அவருக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால்தான் தென் மாவட்டங்களில் அதிமுக தோற்க நேர்ந்தது. இதனால் இந்த முறை தென் மாவட்டத்தை சேர்ந்த குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூக மக்களில் ஒருவருக்கு எம்பி சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். அதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், வைத்திலிங்கம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஒன்று திரண்டு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, நமது சமுதாயத்துக்குத்தான் எம்பி சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் கண்டிப்பாக ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனால்தான் அவர் தனது அணிக்கு ஒரு சீட் வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளார்.

இதுபோல, வன்னியர்களுக்கு சீட் வேண்டும் என்றும், குறிப்பாக செம்மலைக்கு சீட் வழங்க வேண்டும் என்றும் வடக்கு மாவட்ட அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென் மாவட்டமா, வட மாவட்டமா என்ற மோதல் மீண்டும் அதிமுகவில் எழுந்துள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்கள் அதிகமாக வாக்களித்ததால்தான் தென் மாவட்டங்களில் அதிமுகவும், பாஜவும் கணிசமான இடங்களில் வெற்றி பெற முடிந்தது. இதனால் தங்கள் சமூகத்தை அதிமுக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கவில்லை. எனவே, தங்களுக்கு எம்பி சீட் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நாடார் சமூக தலைவர்களும் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனால் அதிமுகவில் 2 எம்பி சீட் பதவியை பிடிக்க இரு தரப்பிலும் வரிந்து கட்டி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாய ரீதியில் அவர்கள் பிரிந்து நிற்பதால், அதிமுகவில் மோதல் வெடிப்பது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதில் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ விட்டுக் கொடுத்தால்தான் சுமுகமான நிலையை எடுட்ட முடியும். ஆனாலும் சமுதாய ரீதியில் தலைவர்கள் பிரிந்திருப்பதால் உள்ளுக்குள் மோதல் வளரவே செய்யும் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

Tags : Rajya Sabha ,AIADMK , EPS-OPS clash over AIADMK's 2 Rajya Sabha seats: Caste clash turns sour
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு