×

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30 வது புத்தகக் கண்காட்சியினை 2007ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று திறந்து வைத்து தலைவர் கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 5 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2022, ஏப்ரல் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் கடந்த 11ம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ. 5 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று ரூ.2 லட்சம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Artist Karunanidhi Foundation ,DMK ,MK Stalin , Rs 2 lakh at the rate of Rs 25,000 each for 8 people on behalf of the Artist Karunanidhi Foundation: DMK leader MK Stalin
× RELATED கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவி நிதி