×

ஆசிரியர்களிடமும், வகுப்பிலும் எல்லை மீறினால் மாணவர்கள் பள்ளியில் இருந்து ‘டிஸ்மிஸ்’: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

சென்னை:  பள்ளிகளில் ஏற்கெனவே தவறு செய்த மற்றும் சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி பள்ளிகளில் மாணவர்களின் தவறுகள் எல்லை மீறினால் அவர்கள், பள்ளியில் இருந்து  டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ‘குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கான வளர்ந்து வரும் கல்வி’ குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
 
பின்னர் அவர் கூறியதாவது: சமூக பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தவறான தாக்கத்தை போக்க வேண்டும். கொரோனாவுக்கு பின் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படி கையாள்வது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்க  பல்வேறு நிகழ்ச்சிகள், நன்னெறி வகுப்புகள் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொண்ட போதும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இனி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் எல்லைமீறிச் செல்லும் போதுதான் மாற்றுச் சான்று (டிசி) அளிக்கப்படும். அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இனி மாணவர்கள் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தேர்வு தேதி கல்வியாண்டு தொடக்கத்தில் அறிவிப்பு: அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில்  எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எல்கேஜி,  யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்  சேர்க்கையை தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். பொதுத்  தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கும். வரும் கல்வி ஆண்டில்  தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து முடிவு  எடுக்கப்படும் என்றார்.

Tags : Minister Love Magesh , Students 'dismissed' from school if they violate boundaries with teachers and class: Minister Anil Mahesh False Warning
× RELATED உடல் உறுப்பு தானம் செய்துள்ள...