கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது தக்காளி விலை ‘கிடுகிடு’ உயர்வு: கேரட், வெண்டைக்காய் விலை சரிவு

சென்னை: வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கேரட், வெண்டைக்காய் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் தக்காளி, வெங்காயம், அவரை, கத்தரி போன்ற காய்கறிகள் லாரி, மினி வேன்களில் கொண்டு வரப்படுகிறது. நேற்று காலை சுமார் 550 வாகனங்களில் 6,000 டன் காய்கறிகள் வந்தன. ஆனால், தக்காளி மட்டும் வழக்கத்தைவிட, குறைவாக வந்தது. இதனால், அதன் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிலோ பெங்களூரூ தக்காளி ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையானது. ரூ.50க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பெங்களூரூ தக்காளி ரூ.70க்கும், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறும்போது, ‘‘வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தக்காளி வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டுக்கு தினமும் 1000 டன் தக்காளி தேவைப்படுகிறது. ஆனால், நேற்று காலை 600 டன் தக்காளிதான் வந்தது. எனவே விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. அதேவேளையில், ஒரு கிலோ கேரட் ரூ.50லிருந்து ரூ.25க்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.50லிருந்து ரூ.15க்கும், வெண்டைக்காய் ரூ.50லிருந்து ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: