வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை காவிரி டெல்டா பகுதிகளில் அரசு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் அரசு அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, அரசு துறை செயலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

   

காவிரி டெல்டா பகுதியில் விளைநிலங்களை பாதுகாக்கவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் முதலமைச்சரை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. சட்டத்தினை மட்டும் இயற்றிவிட்டு, அதனைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர எந்தவொரு முன்னெடுப்பையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. முந்தைய ஆட்சி கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் அது வேளாண் பெருமக்களுடைய நலனைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய சட்டமாக இருக்கிற காரணத்தால், அந்தச் சட்டத்தின் கூறுகளையெல்லாம் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு உறுதியாக இருக்கிறது. வேளாண்மைக்கு நம்முடைய அரசு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது.

 

உழவர்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அரசுதான் நம்முடைய அரசு. சென்ற ஆண்டில் மேட்டூர் அணையினை குறித்த காலத்திலே, அதாவது ஜூன் 12ம்தேதியே திறந்து, 61 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினை நம்முடைய அரசு செயல்படுத்தி காட்டியிருக்கிறது.

மேட்டூர் அணையினை திறப்பதற்கு முன்பாகவே, பாசன கால்வாய்கள் அனைத்தையும் 65 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட்டது நம் அரசு. அதன் விளைவாக, கடந்த 2021ம் ஆண்டின் குறுவை நெல் சாகுபடி பரப்பு 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரை கடந்து, கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையினை நாம் ஏற்படுத்தினோம். இது நம்முடைய ஓராண்டு சாதனையில், மிக முக்கியமான, பெருமைக்குரிய சாதனையாக அமைந்து இருக்கிறது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில், இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம் ஆகியவற்றையும் அறிவித்திருக்கிறோம். காவிரி டெல்டாவில் 30 கோடியே 50 லட்சம் ரூபாயில் திருவாரூரில் சேமிப்புக் கிடங்குகள், உலர் களங்கள், காட்டுமன்னார் கோவில், பேராவூரணி பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள், திருவாரூர் பகுதியில் உணவுப் பூங்கா, 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம், நாகப்பட்டினம் கீழ்வேளூரில் புதிய வேளாண்மை கல்லூரி, கடலூர்மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம், வேளாண் விளைபொருட்கள் அதிக வரத்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு அருகில் சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய விற்பனை நிலையங்கள், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, அரிசி ஆலைகள், பயறு உடைக்கும் நிலையங்கள், எண்ணெய் பிழியும் ஆலைகள், கயிறு ஆலைகள் போன்ற பல்வேறு வேளாண் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில், திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு இடையே இருக்கக்கூடிய பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கக்கூடிய உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அரசு முனைப்போடு செயல்படும். கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதற்கு இந்த அரசு சட்டரீதியான, அரசியல் ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் குறுவை மற்றும் கோடைப் பருவத்தில் குறைந்த நீர்த் தேவையுள்ள மாற்றுப் பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, மதிப்புக் கூட்டுதல் போன்ற ஆலோசனைகளை உள்வாங்கி செயல்படுத்திட வேண்டும். இத்தகைய பயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, உழவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் துணை நிற்க வேண்டும்.

 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளும் செயல்பாட்டிற்கு வரும் வகையில், விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் நல்ல முறையிலே கருத்து பரிமாற்றங்கள் செய்து காவிரி டெல்டா பகுதிக்கென நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுக்க உங்களது வளமான தமிழகம் அமைக்க வேளாண்மையைக் காக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் வேளாண்மையின் மிக முக்கியமான அங்கம் என்கிற காரணத்தால், அதனைக் கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: