×

இசிஆரில் போலி ஆவணம் மூலம் ரூ.65 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி: பதிவுத்துறை தற்காலிக ஊழியர் கைது; நில அபகரிப்பு கும்பல் பற்றி பகீர் தகவல்கள்

சென்னை: சென்னை அருகே ரூ.65 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி செய்தவர்கள் மற்றும் அதற்கு துணை போன பதிவுத்துறை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ரவுடிகள், அதிகாரிகள் உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான ஓ.எம்.ஆர். சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் நிலங்களின் மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆள் உரிமை கோராத நிலங்கள், வெளிநாட்டில் உள்ளோரின் நிலங்களை போலி ஆவணம் மூலம் வளைத்துப் போடும் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.65 கோடி நிலத்தை அபகரிக்க அரசு ஆவணங்களையே திருத்தி பெரும் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுபற்றி சென்னை தாம்பரம் பெருநகர குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவிக்கு நிலமோசடி குறித்து ஒரு புகார் வந்தது. உடனே இது குறித்து கூடுதல் துணை கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது, சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கானத்தூர் ரெட்டிக் குப்பம் ஆகிய கிராமங்களில் தமிழ்நாட்டின் பிரபலமான கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இது முட்டுக்காடு கிராமத்தில் புல எண் 104/3-ல் அடங்கிய பரப்பளவு 5 ஏக்கர் 88 சென்ட் கொண்டது. இந்த சொத்து 1971ம் ஆண்டு சென்னை மாவட்ட சார்பதிவகத்தில் அந்த நிறுவனம் கிரையம் பெற்றுள்ளது. ஒரு சொத்தை வெளியிடங்களில் கிரையம் வாங்கி பதிவு செய்தால் அது பற்றிய குறிப்பை அந்த சொத்து உள்ள சார்பதிவகத்திற்கு அனுப்ப வேண்டும். அதேபோன்று சென்னை சைதாப்பேட்டை சார்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டு அதுகுறித்த குறிப்பும் திருப்போரூர் சார்பதிவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிரையம் பெற்ற நிறுவனம் அதற்கு பட்டாவும் வாங்கியது. இந்த நிலத்தில் தற்போது சவுக்கு மரங்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் போலியாக ஆவணங்களை தயார் செய்து பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் கண்களில் இந்த நிலமும் பட்டுள்ளது. இதையடுத்து, திருப்போரூர் சார்பதிவகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் காசி (60) என்பவரை பிடித்து சென்னை சைதாப்பேட்டை சார்பதிவகத்தில் இருந்து அனுப்பப்பட்ட குறிப்பை அந்த பதிவேட்டில் இருந்து அகற்றினர். அந்த இடத்தில் அந்நிறுவனம் மதுராந்தகத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு கிரையம் செய்தது போன்று பழங்கால பேப்பர்களை வைத்து போலியாக ஆவணம் தயார் செய்து உண்மையான ஆவணம் வைக்கப்பட்டு நீக்கிய இடத்தில் இணைத்துள்ளனர். உண்மையான ஆவணத்தை எடுத்து விட்டனர்.

பின்னர் ஏழுமலை வில்லங்க சான்றிதழ் கேட்டு மனு செய்வதுபோல் செய்து அதில் இந்த சொத்தை ஏழுமலை கிரையம் பெற்றது போல் குறிப்பை எழுதி வழங்கி உள்ளனர். இந்த மோசடிக்கு துணை போன நபர்தான் (மேனுவல் ஈ.சி. எனப்படும்) பழங்கால ஆவணங்களின் வில்லங்க சான்றிதழ்களை பார்த்து வழங்கும் பொறுப்பில் இருந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து 1971ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆவணம் மதுராந்தகத்தில் ஆட்டோவில் செல்லும்போது தொலைந்து விட்டதாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் ஒன்றை மதுராந்தகம் காவல் நிலையத்தில் ஏழுமலை கொடுத்து ஆவணம் கிடைக்கவில்லை என்று சான்றிதழும் பெற்றார்.

இந்த சான்றிதழினை வைத்து தொலைந்து போன ஆவணத்தில் நகல் வேண்டும் என்று கேட்டு திருப்போரூர் சார்பதிவகத்தில் மனு தாக்கல் செய்து தாங்கள் ஏற்கெனவே போலியாக தயார் செய்து கோப்பில் நுழைத்து வைத்திருந்த ஆவணத்தின் நகலை சார்பதிவகம் மூலமாகவே சட்டப்பூர்வமாக பெற்றுள்ளனர். மேலும், அதற்கான மேனுவல் வில்லங்க சான்றிதழினையும் பெற்றுள்ளனர். பின்னர் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுராந்தகத்தை சேர்ந்த ஏழுமலை தனது மகன் ரஞ்சித்குமாருக்கு தான செட்டில்மெண்ட் கொடுப்பது போல் ஆவணம் தயார் செய்து திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுக்கு கொடுத்துள்ளனர்.

அப்போது சார்பதிவாளராக இருந்த செல்வசுந்தரி சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களை கூப்பிட்டு விசாரித்ததார். எனினும் அவரை சமாளிக்கும் வகையில்  அந்த பெண் சார்பதிவாளருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாகவும், போலி ஆவணங்களை உள்ளே நுழைத்து வில்லங்க சான்றிதழ், சான்றிட்ட நகல் போன்றவற்றை வழங்க சார்பதிவாளர் அலுவலக தற்காலிக ஊழியர் காசிக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் போலியாக ஆவணம் தயார் செய்த கும்பல் மதிற்சுவர் போடப்பட்ட நிலத்தின் உள்ளே நுழைந்து அபகரிக்க முயற்சி செய்தபோது உண்மையான உரிமையாளரான பிரபல கிரானைட் கம்பெனி அதிபர்கள் தங்களது நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். இதையடுத்து தனியார் நிறுவனத்தின் சார்பில் சென்னை தாம்பரம் பெருநகர காவல் ஆணையர் ரவியிடம் புகார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த போலி ஆவணம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த தனிப்படை குழுவினர் திருப்போரூர் சார்பதிவகத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட விசாரணையில் அலுவலக தற்காலிக ஊழியர் காசி என்பவர் இந்த முறைகேட்டிற்கு துணை போனது தெரிய வந்தது. மேலும், மதுராந்தகத்தை சேர்ந்த ஏழுமலையின் மகன் ரஞ்சித்குமார் என்பவர் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து செய்யூர் அருகே நடைபெற்ற நில மோசடி வழக்கு, பண மோசடி வழக்கு ஆகியவற்றில் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருப்போரூர் வந்த தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் தற்காலிக ஊழியர் காசி மற்றும் அவரது உறவினர் ஒருவரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தியதில் போலி ஆவணத்தை அலுவலக பதிவேடுகளில் நுழைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து நேற்று மாலை காசியை தனிப்படை போலீசார் திருப்போரூர் சார்பதிவகத்திற்கு அழைத்து வந்து அலுவலகத்தில் நடைபெற்ற மோசடிகள், போலி ஆவணங்கள் நுழைத்தது எப்படி என்று நடித்துக் காட்டக் கோரினர்.

பின்னர், அவரது உறவினரின் அலுவலகம், காசியின் வீடு ஆகிய இடங்களிலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர். போலியாக ஆவணங்களை தயார் செய்து அபகரிக்க முயன்ற நிலத்தின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு ரூ.60 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் ரவுடிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

* யார் அந்த அதிமுக பிரமுகர்
ரூ.65 கோடி நிலத்தை அபகரிக்க நினைத்த கும்பலில் போலி ஆவணத்தை பதிவு செய்த ரஞ்சித்குமார் மற்றும் ஏழுமலை ஆகியோரை மட்டுமே தற்போது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இவர்களை இயக்கிய முக்கிய அதிமுக பிரமுகர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவரும், அவரது மகனும் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை பிடித்தால் மட்டுமே இந்த நில மோசடி கும்பலின் பின்னணி தெரிய வரும் என்றும் அவர்கள் வேறு எந்த இடங்களில் இதுபோன்று போலி ஆவணங்களை தயாரித்து உள்ளனர் என்பதும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்

* அதிமுக செல்வாக்கு உள்ளவர்
அதிமுக ஆட்சி நடைபெற்ற 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. அப்போது சார்பதிவாளராக இருந்த பெண் சார்பதிவாளர் அதிமுக கூட்டணிக் கட்சி தலைவரின் உறவினர் என்று கூறி இந்த சார்பதிவகத்திற்கு மாற்றலாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பெண் சார்பதிவாளர் 2021ம் ஆண்டில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று இடை நீக்கமும் செய்யப்பட்டார்.


Tags : Pakir , Attempt to expropriate Rs 65 crore land through forged document in ECR: Registration temporary employee arrested; Pakir information about land grabbing gang
× RELATED தக்கலை அருகே மர்ம சாவு பைனான்ஸ்...